க்ஷடெல்லி காவல்துறையின் குற்றப்பிரிவு போலீசார் விலையுயர்ந்த ஆனால் போலியான புற்றுநோய் மருந்துகளை விற்பனை செய்த ஒரு அமைப்புசார் கும்பலை கைது செய்துள்ளது. அதாவது Opdivo, Keytruda, Erbitux, Lenvima உள்ளிட்ட உயிர்க்காக்கும் மருந்துகளை போலியாக தயாரித்து விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சுமிநகர், புத் விஹார், சாந்தினி சவுக் ஆகிய மூன்று பகுதிகளில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தியதில் லட்சக்கணக்கான மதிப்புள்ள போலி மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த கும்பல், சமூக ஊடகங்கள் வாயிலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைத் தேடி, உண்மையான மருந்துகளுக்குப் பதிலாக போலி மருந்துகளை மலிவான விலைக்கு வழங்கி மோசடி செய்துள்ளனர். சந்தையில் ரூ.1.5 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரையிலான விலையுள்ள மருந்துகளை, ரூ.50,000 முதல் ரூ.70,000 வரை விற்றுள்ளனர். இதன் மூலம் நோயாளிகளின் உயிருடன் விளையாடியுள்ளனர். இந்த வழக்கில் முக்கிய தலைமை குற்றவாளியான நவீன் ஆர்யா, இதற்கு முன் இதே வழக்கில் சிறை சென்றிருந்தபினும், ஜாமீனில் வெளிவந்து மீண்டும் மோசடியைத் தொடங்கியதும் தெரியவந்துள்ளது.
சோதனைகளில், 19 Opdivo ஊசிகள், 20 Solair கேன்கள், 5 Hemlibra, 3 Dupixent, 1 Keytruda, 3 Erbitux, 3 Lenvima, 2 Venclexta மற்றும் 1 பாக்ஸில் Bonaxon மாத்திரைகள் உள்ளிட்ட மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் போலி மருந்து விற்பனையின் பெரும் அபாயத்தை வெளிப்படுத்துவதுடன், மருந்துகளை வாங்கும் பொழுது மக்கள் அவசியம் சரிபார்க்க வேண்டும் என்ற எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
