வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் தங்க ஆபரணங்களைக் கொண்டு வருவதற்கான சுங்க வரி விதிமுறைகளில் மத்திய நேரடி வரிகள் வாரியம் அண்மையில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி 2-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள இந்த புதிய விதிகளின்படி, இந்திய குடிமகனாக இருந்து ஓராண்டுக்கும் மேலாக வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், அதிகபட்சமாக 40 கிராம் வரையிலான தங்க நகைகளை வரியின்றி எடுத்து வர அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறிப்பாக, ஆண் பயணிகளுக்கு 20 கிராம் வரையிலும், பெண்களுக்கு அதற்கும் மேலான அளவிலும் வரி விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய சுற்றுலாப் பயணிகள் அல்லது பிற விசாவில் வரும் வெளிநாட்டவர்கள் எடுத்து வரும் பொருட்களுக்கான மதிப்பும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியர்கள் 75,000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் வரை சுங்க வரி இன்றி கொண்டு வரலாம்.
மேலும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த வரம்பு 25,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டின் உடமை விதிகளில் செய்யப்பட்டுள்ள இந்த புதிய திருத்தங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பயனுள்ளதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், நிர்ணயிக்கப்பட்ட அளவைத் தாண்டும் போது உரிய சுங்க வரியைச் செலுத்துவது கட்டாயமாகும்.
