ஒடிசா மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவர், தனது பள்ளி வளாகத்திலேயே சக மாணவர்களால் பல மணி நேரம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாணவியின் வகுப்புத் தோழர்களே இந்த கொடூரச் செயலில் ஈடுபட்டுள்ளனர். ஒருவருக்கொருவர் முறை வைத்துக்கொண்டு பல மணி நேரமாக அப்பெண்ணைச் சீரழித்ததோடு மட்டுமல்லாமல், அந்த வன்கொடுமையை வீடியோவாகவும் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பரப்பியுள்ளனர்.

இந்தப் பகீர் சம்பவம் பள்ளி நிர்வாகத்தின் பாதுகாப்புக் குறைபாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுவதோடு, கல்வியைக் கற்கும் இடத்திலேயே இத்தகைய கொடூரம் நடந்திருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், இச்சம்பவம் தொடர்பாகப் பள்ளி மாணவர்கள் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றிய காவல்துறையினர், இக்கொடூரச் செயலில் ஈடுபட்ட மற்ற மாணவர்களையும் தேடி வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் இத்தகைய வன்முறைப் போக்கு சமூக ஆர்வலர்களைக் கவலையடையச் செய்துள்ளது.

இந்நிலையில் தவறு செய்தவர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், பள்ளி மாணவர்களிடையே நிலவும் இத்தகைய ஒழுக்கக் கேடுகளைக் களைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.