இந்தியாவில் தற்போது வெளிநாடு சென்று கல்வி பயிலக்கூடிய மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பள்ளி மாணவர்கள் 12ம் வகுப்பு முடித்த உடனே இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்கள் பெற வெளிநாடு சென்று படிக்க விரும்புகிறார்கள். இப்படியான நிலையில் வெளிநாடு சென்று படிக்க விரும்பும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இங்கிலாந்தின் சிறந்த கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஷெஃபீல்ட் பல்கலைக்கழகம் இந்தியர்கள் உட்பட சர்வதேச மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான முதுகலை படிப்புக்கான ஸ்காலர்ஷிப் அதாவது சர்வதேச கல்வி உதவித் தொகையை வழங்குவதாக அறிவித்துள்ளது.
பல்கலைக்கழகம் 75 சர்வதேச மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்க உள்ளதாகவும் ஒவ்வொருவருக்கும் 10,000 பவுண்டுகள் அதாவது தோராயமாக 11 லட்சம் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த உதவித்தொகை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் முதுகலை படிப்பை தொடர உள்ள தகுதி உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இந்த பல்கலைக்கழகத்தில் இருந்து சேர்க்கை சலுகை கடிதத்தை பெறுவது அவசியம்.
இந்த உதவி தொகை வளாகத்தில் முதுகலை படிப்புக்கான திட்டங்களுக்கு மட்டுமே கிடைக்கும். தொலைதூரக் கல்வி மாணவர்கள் நிதி உதவியை பெற தகுதியற்றவர்கள். மாணவர்களின் விண்ணப்பங்களை மூத்த பல்கலைக்கழக உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்கள் அடங்கிய குழு மதிப்பாய்வு செய்யும் எனவும் தகுதி உள்ள மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் பயனடைய மே 12 வரை விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உதவி தொகையை ஏற்றுக் கொள்ள வேண்டும். மேலும் இது குறித்த விவரங்கள் அறிய ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.
