தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகை இன்று (ஜன. 15) தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

“புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலெனப் பொங்கிட, இனித்திடும் செங்கரும்பைச் சுவைத்து, செங்கதிரோனைப் போற்றிடும் தமிழர் திருநாளில், தமிழர் வாழ்வு செழித்திட வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ள அவர், தமிழர் இல்லங்களில் பொங்கிடும் இந்த மகிழ்ச்சி, திராவிட மாடல் 2.0 ஆட்சியில் பன்மடங்காக உயரும் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், “வெல்வோம் ஒன்றாக” என்ற முழக்கத்துடன், ஜாதி பேதமற்ற சமத்துவப் பொங்கலாக இது அமைய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், பொங்கல் பரிசுத் தொகையாக ரூ. 3,000 வழங்கப்பட்டிருப்பதையும், அரசின் நலத்திட்டங்களையும் சுட்டிக்காட்டி அவர் வெளியிட்டுள்ள இந்த வாழ்த்துச் செய்தி உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.