பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் வெறும் பார்க்கிங் தகராறு காரணமாகத் தொடங்கிய மோதல், இரண்டு உயிர்களைப் பறித்த கொடூரச் சம்பவமாக முடிந்துள்ளது. போர்ப்ஸ்கஞ்ச் நகரில் வியாழக்கிழமை அன்று, ரவி சவுகான் என்ற சத்து மாவு விற்பனையாளருக்கும், நபி ஹசன் என்ற பிக்கப் வேன் ஓட்டுநருக்கும் இடையே வாகனத்தை நிறுத்துவதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த ரவி சவுகான், மறைத்து வைத்திருந்த கத்தியால் ஓட்டுநர் நபி ஹசனின் கழுத்தை நடுரோட்டில் அறுத்தெறிந்து தலையைத் துண்டித்தார். இந்த பயங்கரக் காட்சியைக் கண்ட மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். ​இந்தக் கொலையைத் தொடர்ந்து, தப்பியோடி ஒளிந்து கொண்டிருந்த ரவி சவுகானை ஆவேசமடைந்த பொதுமக்களும் ஓட்டுநரின் உறவினர்களும் தேடிப்பிடித்து இழுத்து வந்தனர். போலீஸார் அங்கிருந்தபோதும், கட்டுப்பாட்டை மீறிய கும்பல் ரவி சவுகானைத் தடிகளாலும் கம்பிகளாலும் சரமாரியாகத் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தைச் சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், பீகாரில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், குற்றவாளிகளுக்குச் சட்டத்தின் மீது பயம் இல்லை என்றும் மாநில அரசைத் தாக்கிப் பேசியுள்ளார். தற்போது அங்குப் பதற்றம் நிலவுவதால் கூடுதல் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.