சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு நெகிழ்ச்சியான வீடியோ, மகிழ்ச்சி என்பது விலையுயர்ந்த பொருட்களில் இல்லை, அன்பான உணர்வுகளில்தான் உள்ளது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. ‘வாவாச்சி’ என்ற 5 வயது சிறுவன் தனது பிறந்தநாள் பரிசைப் பிரிக்கும் இந்த வீடியோ பலரது இதயங்களை வென்றுள்ளது. அவன் ஆவலுடன் பிரித்துப் பார்த்த அந்தப் பரிசுப் பெட்டியில் எந்த ஒரு விலை உயர்ந்த எலக்ட்ரானிக் கேஜெட்டுகளோ அல்லது ஆடம்பரமான பொம்மைகளோ இல்லை.

மாறாக, அதில் ஸ்கெட்ச் பேனாக்கள், கிரேயான்ஸ், சாக்லேட்டுகள் மற்றும் ஒரு சாதாரண நோட்டுப் புத்தகம் மட்டுமே இருந்தன. ஆனால், அந்த எளிய பொருட்களைக் கண்டவுடன் அச்சிறுவன் அடைந்த எல்லையற்ற மகிழ்ச்சியும், அவனது முகத்தில் மின்னிய புன்னகையும் இணையவாசிகளை நெகிழச் செய்துள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Nehal (@growwith_nehal)

“>

மேலும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோவை இதுவரை சுமார் 2 கோடிக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். அந்தச் சிறுவன் ஒவ்வொரு பொருளையும் வெளியே எடுக்கும்போது காட்டிய உற்சாகமும், நன்றியோடு அவன் துள்ளிக் குதித்த விதமும் பார்ப்பவர் கண்களில் கண்ணீரை வரவழைப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்றைய இயந்திரத்தனமான வாழ்க்கையில் நாம் பெரிய மகிழ்ச்சிகளைத் தேடி ஓடிக்கொண்டிருக்கும் வேளையில், இந்தச் சிறுவனின் தூய்மையான அன்பு மற்றும் எளிமையான அணுகுமுறை வாழ்க்கையின் உண்மையான அர்த்தத்தை நமக்கு உணர்த்துகிறது. “நாம் ஏன் இதுபோன்று வாழ்வதை நிறுத்திவிட்டோம்?” என்ற கேள்வியோடு இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.