குருகிராமின் செக்டார்-9 பகுதியில் சந்தேகத்தால் ஏற்பட்ட தகராறில் கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தீபக் மற்றும் சோனம் ஆகிய இருவரும் 7 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளான். கடந்த சில நாட்களாக தீபக் தனது மனைவி சோனம் மீது கடும் சந்தேகத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி தீபக் வீட்டிற்கு வந்தபோது, சோனம் சமையலறையில் ஒருவருக்கு ‘வீடியோ கால்’ மூலம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீபக், சோனமிடம் போனை கேட்டு சண்டையிட்டுள்ளார்.

இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், தனது 10 வயது மகனை மட்டும் வேறொரு அறைக்குச் சென்று ‘டிவி’ பார்க்குமாறு தீபக் கூறியுள்ளார்.

பின்னர், ஆத்திரத்தில் சோனமின் துப்பட்டாவாலேயே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். மனைவி இறந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தீபக், தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

சோனமின் சகோதரி போன் செய்தும் யாரும் எடுக்காததால், நேரில் வந்து பார்த்தபோதுதான் இந்த கொடூர சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், சோனமின் போனில் இருந்த சில எண்களும், அடிக்கடி வந்த வீடியோ கால்களுமே இந்த மோதலுக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

ஒரு சிறிய சந்தேகத்தால் ஒரு குடும்பமே சிதைந்து, 10 வயது சிறுவன் அனாதையாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.