கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ஒரு பட்டாசுத் தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து ஒட்டுமொத்த மாநிலத்தையும் உலுக்கியுள்ளது.
வழக்கம்போல் பணிகள் நடந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தால் பட்டாசுகள் வெடித்துச் சிதறின. இந்த கோர விபத்தில் இதுவரை 13 பேர் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
வெடி விபத்தின் தாக்கம் பல கிலோமீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதாகவும், ஆலையின் கட்டிடம் முழுவதுமாக இடிந்து தரைமட்டமானதாகவும் கூறப்படுகிறது.
கட்டிட இடிபாடுகளுக்குள் 40-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது.
சம்பவ இடத்திற்கு விரைந்துள்ள தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்புக் குழுவினர், ஜேசிபி இயந்திரங்களின் உதவியுடன் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவம் திருச்சூர் பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
