மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில், 11 வயது சிறுவன் ஒருவன் மிகக் கொடூரமான முறையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டு, அவனது சடலம் பிளாஸ்டிக் பேரலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது சத்னா மாவட்டம் கோல்கவா பேங்க் காலனியில் உள்ள வாடகை வீட்டில், ஆஷா என்ற பெண் தனது மகள் செஜல் மற்றும் 11 வயது மகன் சூரஜ் ஆகியோருடன் வசித்து வருகிறார். நேற்று காலை ஆஷாவும் அவரது மகளும் வேலைக்குச் சென்றுவிட்ட நிலையில், சிறுவன் சூரஜ் மட்டும் வீட்டில் இருந்துள்ளான்.
மதியம் ஆஷா வீட்டிற்குத் திரும்பியபோது, வீட்டின் கதவு வெளிப்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது. ஆனால், உள்ளே மின்விசிறி மற்றும் கூலர் ஓடும் சத்தம் கேட்டுள்ளது. மகன் எங்கே என்று தேடியும் கிடைக்காததால், சந்தேகமடைந்த ஆஷா போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். போலீஸார் முன்னிலையில் வீட்டின் கதவு உடைக்கப்பட்டபோது, உள்ளே சுவர்களிலும் தலையணைகளிலும் ரத்தக் கறைகள் படிந்திருந்தன.
அங்கிருந்த ஒரு நீல நிற பிளாஸ்டிக் பேரலில் இருந்து ரத்தம் கசிவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீஸார், அதிலிருந்த துணிகளை அகற்றினர். அப்போது, உள்ளே சிறுவன் சூரஜ் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தான். கொலையாளி கூர்மையான ஆயுதத்தால் சிறுவனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்து, சடலத்தை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
இந்தக் கொடூரக் கொலை தொடர்பாக, அதே பகுதியில் சலவைக் கடை நடத்தி வரும் மதுரா ரஜக் என்பவர் மீது போலீஸாருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட தாய் கூறுகையில், “மதுரா ரஜக் என்னை வலுக்கட்டாயமாகத் திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தி வந்தான். நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட ஆத்திரத்தில், என் மகனை அவன் கொலை செய்திருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று மதுரா ரஜக்கின் கடையும் பூட்டப்பட்டிருந்ததால், அவர் மீதான சந்தேகம் வலுத்துள்ளது. ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு ஆறாம் வகுப்பு செல்லவிருந்த சிறுவன், இத்தகைய கொடூரத்திற்கு ஆளானது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் கைரேகை நிபுணர்கள் பல்வேறு சான்றுகளைச் சேகரித்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள முக்கியக் குற்றவாளி மதுரா ரஜக்கைப் பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
