கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே இளம் பெண் ஒருவர் வீட்டிற்குள் தூக்கிட்டு மர்ம நிலையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பரமார்த்தலிங்கபுரத்தைச் சேர்ந்த மிக்கேல் சேவியர் (48). இவர் டெய்லர். இவர் தற்போது குடும்பத்துடன் பள்ளவிளை கங்காநகர் முதல் தெருவில் வசித்து வருகிறார். இவரது மகள் லிவினா (21), பி.எஸ்.சி. பட்டம் பெற்றவர். பகுதி நேரமாக ஒரு அழகுநிலையத்தில் வேலை செய்து வந்த அவர், தகுந்த நிரந்தர வேலை தேடி வந்தார்.

நேற்று முன்தினம், லிவினா மற்றும் அவரது சகோதரி ஷைனி மட்டும் வீட்டில் இருந்தனர். அந்த நேரத்தில், லிவினா ஒரு அறைக்குள் சென்ற நிலையில் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. கதவைத் தட்டியும் திறக்கப்படாததால், சந்தேகம் கொண்ட சகோதரி ஷைனி அக்கம் பக்கத்தினரை அழைத்து கதவை உடைத்துப் பார்த்தார்.

உள்ளே சென்றபோது, லிவினா தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக மீட்டு, ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். மேலும், அவர் இறப்பதற்கு முன்பு ஏதேனும் குறிப்பு எழுதி வைத்திருந்தாரா என வீட்டை முழுவதும் சோதனை செய்தபோதும் எதுவும் கிடைக்கவில்லை. லிவினா பயன்படுத்திய செல்போனை கைப்பற்றிய போலீசார், அதில் சிம்கார்டு இல்லாமல் இருந்ததையும் கண்டுபிடித்தனர். செல்போன் மூலம் எந்த தகவல்களாவது கிடைக்குமா என்பதற்காக போலீசார் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

தற்கொலைக்கான காரணம் குறித்து லிவினாவின் தோழிகள் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும், லிவினாவின் தாய் சோபா (46) அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நேற்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிக்கப்பட்டு, லிவினாவின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.