கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தம்பி ஒருவர் அண்ணன் கூறிய கண்டிப்பை மனதில் கொண்டு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னசேலம் அடுத்த காளசமுத்திரம் கிராமம், கிழக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்த முருகேசனின் மகன் சதீஷ்குமார் (31). இவர் தனியார் நிறுவனத்தில் பணி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவரது தம்பி சுரேஷ்குமார் (26), சின்னசேலம் அடுத்த தோட்டப்பாடி கிராமத்தில் உள்ள தனியார் எல்பிஜி கியாஸ் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, வீட்டில் வளர்த்து வரும் பசுமாட்டின் பாலை சொசைட்டிக்கு எடுத்துச் செல்ல வேண்டியிருந்தது. ஆனால், சுரேஷ்குமார் செல்போன் பார்த்துக்கொண்டு இருப்பதை கவனித்த சதீஷ்குமார், ஏன் பாலை சொசைட்டிக்கு கொடுக்காமல் நேரம் வீணடிக்கிறாய் என்று கண்டித்துள்ளார். பின்னர், அவர் தானே பாலை சொசைட்டிக்கு எடுத்துச் சென்றுவிட்டார்.

அண்ணன் கூறிய கண்டிப்பை மனதில் கொண்ட சுரேஷ்குமார், வீட்டுக்கு உள்ளேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்ய முயன்றார். பாலை கொடுத்து வீட்டிற்கு திரும்பிய சதீஷ்குமார், தம்பி தூக்கில் தொங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினருடன் சேர்ந்து கீழே இறக்கி, சின்னசேலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், பரிசோதனை செய்து பார்த்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்.

மேலும் இதுகுறித்து சதீஷ்குமார் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.