தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லம் முன்பாக இன்று (ஜன. 15) காலை முதலே நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
ரசிகர்களின் வாழ்த்தொலியை ஏற்று, தனது இல்லத்தின் வாசலுக்கு வந்த ரஜினிகாந்த், அனைவருக்கும் கையசைத்துப் பொங்கல் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உலகமெங்கும் வாழும் தமிழர்களுக்கு எனது இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்; எல்லோரும் எல்லா நலமும் பெற்று நன்றாக இருக்க வேண்டும்.
நாட்டின் முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகள் நன்றாக இருந்தால்தான் இந்த நாடு செழிப்பாக இருக்கும். அதனால் விவசாயிகள் செழிப்புற இறைவனை வேண்டுகிறேன்” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் ரசிகர்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டுள்ள ரஜினிகாந்த், இந்த ஆண்டும் அவர்களை நேரில் சந்தித்து உற்சாகப்படுத்தியது போயஸ் கார்டன் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
