தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜாவை ஆதரித்து அவர் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அப்போது அங்கிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் தங்கள் வீட்டுக் குழந்தைக்குப் பெயர் சூட்டுமாறு உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனர். பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட துணை முதலமைச்சர், அந்த ஆண் குழந்தையைத் கையில் ஏந்தி மகிழ்ச்சியுடன் ‘உதயசூரியன்’ என்று பெயர் சூட்டினார்.
மேலும் கட்சியின் சின்னமான உதயசூரியன் பெயரையே குழந்தைக்கு அவர் சூட்டியது அங்கிருந்த தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. பிரச்சாரக் களத்தில் நடந்த இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
