தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதம், ஒரு “முப்பெரும் விழா” எனும் பெயரில் கதறலை வெளிப்படுத்துவதாகக் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மதுரை மாநாட்டில் அறிவித்தபடி, ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது. உங்க விஜய், நான் வரேன்’ என மக்களுடன் நேரில் சந்திக்கும் நிகழ்வை திருச்சியில் துவக்கினோம். மக்கள் பெருமளவில் திரண்டனர். அவர்கள் எதிர்காலத்திற்கான நம்பிக்கையை பிரதிபலித்தனர்.

விஜய் மக்கள் இடையே வர மாட்டார் என்று எதிரணியினர் கூறிய நிலையில், இன்று அவர்கள் பல்வேறு வழிகளில் கதறத் தொடங்கியுள்ளனர். அந்த கதறலே முதலமைச்சர் எழுதிய கடிதமாக வெளிவந்துள்ளது. அதில் புதிய எதிரிகள் என ஒருவரையும் சொல்லாமல் மறைமுகமாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இன்னும் என்னென்னவோ விரத்தியையும் வெறுப்பையும் கக்கும் வார்த்தைகள் அந்த கடிதத்தில் அழுது கொண்டிருக்கிறது. கடந்த கால அரசியல் மரபைப் போலவே, பழைய எதிரிகளை விலக்கி, புதிய எதிரிகளை உருவாக்கும் புது சூழ்நிலை உருவாகியுள்ளது,” என்றார்.

மேலும், திமுக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பதிலடி கொடுத்த விஜய், அரசு மீது பல கேள்விகளை எழுப்பியுள்ளார்: அங்கன்வாடி பணியாளர்கள், மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள், சாம்சங் தொழிலாளர்கள், மீனவர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் நடத்தும் போராட்டங்களை அரசு கவனிக்கவில்லை என்றும், அடக்குமுறைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். அரசின் வெற்று விளம்பர அரசியல், பொய்யான வாக்குறுதிகள் மற்றும் மக்கள் நலன்களை புறக்கணித்தமை பற்றி மக்கள் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமக்கென்று உருவாகிய புதிய அரசியல் இயக்கம், திமுகவை பதறவைத்துள்ளதாகவும், மக்களிடையே தமிழக வெற்றிக் கழகம் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் விஜய் தெரிவித்தார். “யார் எவ்வளவு கூப்பிட்டாலும், எப்படிக் கதறினாலும், நாம் மக்கள் ஆதரவைப் பெற்று முன்னேறுவோம். பெரியார், காமராஜர், அம்பேத்கர், வேலுநாச்சியார், அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கைகளை வழிகாட்டியாகக் கொண்டு சமூகநீதியின் பாதையில் பயணிக்கிறோம்,” என அவர் கூறினார். மேலும் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில், 1967 மற்றும் 1977ல் ஏற்பட்ட மாபெரும் அரசியல் மாற்றங்களைப் போலவே, புதிய மாற்றத்தை தமிழக வெற்றிக் கழகம் உறுதியாக உருவாக்கும் என்றும் விஜய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.