மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கேர் சிஹெச்எல் (Care CHL) மருத்துவமனையில், 48 வயது மதிக்கத்தக்கப் பெண் ஒருவருக்குக் கடுமையான வயிற்று வலி மற்றும் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வயிற்றில் ‘கால்பந்து’ (Football) அளவிலான மிகப்பெரிய தசைக்கட்டி (Fibroid) இருப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே நான்கு மாதங்களுக்கு முன்பு கடுமையான மூளை பாதிப்பு நோய் ஏற்பட்டிருந்ததால், இந்த அறுவை சிகிச்சையைச் செய்வது மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.
இருப்பினும், நரம்பியல் நிபுணர் டாக்டர் மனோரஞ்சன் பர்ன்வால் தலைமையிலான மருத்துவக் குழுவினர், அந்தப் பெண்ணுக்கு மிகவும் நுணுக்கமான முறையில் அறுவை சிகிச்சை செய்து, அவரது வயிற்றில் இருந்த சுமார் 3 கிலோ எடையுள்ள ராட்சத கட்டியை வெற்றிகரமாக அப்புறப்படுத்தியுள்ளனர்.
சிக்கலான சூழ்நிலையிலும் சாதித்துக் காட்டிய இந்தூர் மருத்துவர்களின் இந்த அரிய சாதனைக்கு தற்போது பலரும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
