டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஒரு மிகப்பெரிய விமான விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. டெல்லியில் இருந்து சூரிச் நகருக்கு 232 பயணிகளுடன் புறப்படத் தயாரான ‘ஸ்விஸ் ஏர்லைன்ஸ்’ (Swiss Air LX 147) விமானம், ரன்வேயில் வேகமாகச் சென்றபோது திடீரென அதன் இடது பக்க இன்ஜினில் தீப்பிடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விமானிகள், உடனடியாக டேக்-ஆஃப் செய்வதை நிறுத்திவிட்டு விமானத்தை அவசர அவசரமாக நிறுத்தினர்.
இன்ஜினில் இருந்து கரும்புகை வெளியேறியதால், விமானத்தில் இருந்த அவசர கால ஸ்லைடுகள் (Emergency Slides) வழியாக பயணிகள் அனைவரும் மின்னல் வேகத்தில் வெளியேற்றப்பட்டனர். இந்த இக்கட்டான சூழலில் 6 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். அதிர்ஷ்டவசமாகப் பெரும் உயிர்ச் சேதம் தவிர்க்கப்பட்டாலும், இந்தச் சம்பவம் டெல்லி விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, விமானப் பயணிகளின் பாதுகாப்புக் குறித்த அச்சத்தை மீண்டும் எழுப்பியுள்ளது.
