பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் காய்கறி விற்பனை செய்து வந்த பெண் மீது கொதிக்கும் கஞ்சி நீர் ஊற்றப்பட்ட கொடூரமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரீதா தேவி என்ற பெண், மாடிபூர் மேம்பாலத்திற்கு அருகில் காய்கறி விற்பனை செய்து கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஒரு வீட்டிலிருந்து மர்ம நபர் ஒருவர் அவர் மீது கொதிக்கும் அரிசி கஞ்சி நீரை ஊற்றியுள்ளார்.

இதில் அந்தப் பெண்ணின் முகம், கழுத்து மற்றும் முதுகுப் பகுதிகள் கடுமையாகப் பொசுங்கி, அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பத்து ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்த ரீதா தேவி, தனது மூன்று மகன்களையும் காய்கறி விற்று வரும் வருமானத்திலேயே காப்பாற்றி வந்துள்ளார். இந்தத் தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாகப் பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், இது தற்செயலாக நடந்ததா அல்லது முன்விரோதம் காரணமாக நடத்தப்பட்ட தாக்குதலா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உழைக்கும் ஏழைப் பெண் மீது நடத்தப்பட்ட இத்தகைய மனிதாபிமானமற்ற செயல் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.