சத்தீஸ்கர் உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள இந்தத் தீர்ப்பு நாடு முழுவதும் பெரும் விவாதத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2004-ம் ஆண்டு இளம்பெண் ஒருவரைக் கடத்திச் சென்று, கட்டிப்போட்டுச் சித்திரவதை செய்த வழக்கில், ஒரு இளைஞருக்குக் கீழமை நீதிமன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்திருந்தது. ஆனால், இந்தத் தண்டனையை எதிர்த்துத் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் விந்தணுக்கள் கண்டறியப்படவில்லை என்ற மருத்துவ அறிக்கையைச் சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம், இது ‘பாலியல் பலாத்காரம்’ (Rape) அல்ல, ‘பாலியல் பலாத்கார முயற்சி’ (Attempt to Rape) மட்டுமே என்று கூறி தண்டனையை மூன்றரை ஆண்டுகளாகக் குறைத்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

​நீதிபதி நரேந்திர குமார் வியாஸ் தலைமையிலான அமர்வு, இந்திய தண்டனைச் சட்டம் 375-ன் கீழ் பாலியல் பலாத்காரத்தை முழுமையாக நிரூபிக்கப் போதிய ஆதாரங்கள் இல்லை என்று தெரிவித்துள்ளது. பெண்ணுறுப்புக்குள் விந்தணு செலுத்தப்பட்டதற்கான தடயங்கள் இல்லாததால், இது பலாத்கார முயற்சியாகவே கருதப்படும் என்று நீதிமன்றம் விளக்கமளித்துள்ளது. எனினும், அந்தப் பெண்ணைக் கட்டாயப்படுத்தி ஆடையைக் களைந்து துன்புறுத்தியது உறுதியானதால், சட்டப்பிரிவு 511-ன் கீழ் தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் பழமையான இந்த வழக்கில் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீர்ப்பு, சட்ட நுணுக்கங்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.