தேர்வு அறைக்குள் மொபைல் போன் கொண்டு வந்த மாணவனின் போனை, பள்ளி தலைமை ஆசிரியர் மைதானத்தில் வைத்து எல்லார் முன்னாடியும் அடித்து நொறுக்கிய சம்பவம் இணையத்தில் மிகப்பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. குமில்லா முராதநகரில் உள்ள கோம்தா இஷாகியா உயர்நிலைப் பள்ளியில் தான் இந்த அதிரடி சம்பவம் நடந்துள்ளது. பள்ளியின் விதிமுறைப்படி தேர்வு நடக்கும் நாட்களுக்குள் மொபைல் போன் கொண்டு வரக் கூடாது என்று 7 நாட்களுக்கு முன்பே பள்ளி நிர்வாகம் தரப்பில் மிகக் கடுமையான எச்சரிக்கை நோட்டீஸ் விடப்பட்டுள்ளது.

மீறி யாராவது போன் கொண்டு வந்தால் என்ன நடக்கும் என்றும் மாணவர்களுக்கு தெளிவான வார்னிங் கொடுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.​ஆனால், இந்த எச்சரிக்கையையும் மீறி ஒரு மாணவன் தேர்வு அறைக்குள் அசால்ட்டாக மொபைல் போனை எடுத்துக்கொண்டு வந்துள்ளான். இதைப் பார்த்த தலைமை ஆசிரியர் ஆத்திரத்தின் உச்சத்துக்கே சென்றுள்ளார். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில், அந்த மொபைல் போனை பறிமுதல் செய்த எச்.எம், அதை நேராகப் பள்ளி விளையாட்டு மைதானத்திற்கு எடுத்துச் சென்று, சக மாணவர்கள் எல்லாரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே தரையில் போட்டு அடித்து நொறுக்கியுள்ளார்.

இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி, “மாணவன் செய்தது தப்புதான் என்றாலும், எச்.எம் இப்படி நடு மைதானத்தில் வச்சு போனை உடைக்கலாமா?” என்றும், “விதிமுறையை மீறினால் இப்படித்தான் தண்டிக்க வேண்டும்” என்றும் நெட்டிசன்களுக்கு இடையே இருவேறு கருத்துகளாக மோதி, விவாதம் பற்றி எரிகிறது!