தமிழக அரசியல் களம் தேர்தல் ஜூரத்தில் தகித்துக் கொண்டிருக்கும் வேளையில், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், நடிகர் விஜய் மற்றும் அவரது நிர்வாகி குறித்து வெளியிட்டுள்ள ஒரு தகவல் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. அதாவது சென்னையில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு பேசிய வேல்முருகன், பல ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விஜய்யின் ‘கத்தி’ திரைப்பட வெளியீட்டின் போது நடந்த மறைமுகப் பேச்சுவார்த்தைகள் குறித்து முதல்முறையாக வெளிப்படையாகப் பேசினார்.

இது பற்றி அவர் கூறியதாவது, கத்தி படத்தை எதிர்த்து நான் போராடியபோது, இன்றைய முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் விஜய்யின் மேலாளர் என்னிடம் வந்து பேரம் பேசினார். போராட்டத்தைக் கைவிட ஒரு பெரிய தொகையை நன்கொடையாக தருவதாகவும், எனது கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் வாகனங்கள் (Cars) வாங்கித் தருவதாகவும் ஆசை காட்டினார்,” என்று வேல்முருகன் குற்றம் சாட்டினார்.

அதோடு தான் இதுவரை யாரிடமும் லஞ்சமோ அல்லது கமிஷனோ வாங்கியது கிடையாது என்றும், அந்தப் பேரத்தை தான் அப்போதே நிராகரித்துவிட்டதாகவும் அவர் அந்த மேடையில் தெரிவித்தார். ஆக்ஸிஸ் மை இந்தியா கருத்துக்கணிப்பு விஜய்க்கு ஆதரவாக வந்துள்ள நிலையில், வேல்முருகனின் இந்தப் பேச்சு தவெக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் விஜய்யின் அரசியல் வருகையைத் தொடர்ந்து பழைய விவகாரங்கள் மீண்டும் கிளறப்படுவது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது.