தூத்துக்குடி மாவட்டம் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தம் அருகே பொதுமக்களுக்கும், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பெரும் இடையூறாக இருந்து வந்த டாஸ்மாக் மதுக்கடை, தமிழக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் அதிகாரிகளால் அதிரடியாக மூடப்பட்டது.

பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் வியாபாரிகள் தினசரி வந்து செல்லும் முக்கியப் பகுதியான இங்கு இந்த மதுக்கடை இயங்கி வந்ததால், மதுப்பிரியர்களின் தொல்லையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இக்கடையை அகற்றக் கோரி சில மாதங்களுக்கு முன்பு நாடார் உறவின்முறை சங்கத்தினர் மற்றும் அனைத்துத் தரப்பு மக்களும் இணைந்து பிரம்மாண்ட சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது விரைவில் நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

இருப்பினும், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாததால் மக்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். இந்தச் சூழலில், தமிழகத்தில் முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவின்படி, அதிகாரிகள் தெற்கு ஆத்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்த டாஸ்மாக் கடையைப் பூட்டி, சீல் வைத்தனர். நீண்ட நாட்களாகத் தங்களுக்குப் பெரும் சிரமத்தைக் கொடுத்து வந்த மதுக்கடை தற்போது முழுமையாக மூடப்பட்டதை அடுத்து, அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் இனிப்பு வழங்கி தங்களது மகிழ்ச்சியைக் கொண்டாடியதோடு, முதலமைச்சர் விஜய்க்குத் தங்களது மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக் கொண்டனர்.