தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வியாசர்பாடி பேராலய அருட்தந்தை சார்லஸ் குமார் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். விஜய் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவராக இருப்பதாகவும், அவருக்கு மக்கள் ஆதரவு கிடைக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சினிமாவிலிருந்து அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய், தனது கட்சியின் கொள்கைகளை அறிவித்துச் செயல்பட்டு வரும் நிலையில், ஆன்மிக ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவர் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில், சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பேராலய அருட்தந்தை சார்லஸ் குமார் செய்தியாளர்களிடம் பேசியபோது விஜய்யின் அரசியல் வருகை குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அவர் பேசியதாவது,

விஜய் அவர்கள் பெயரளவில் மட்டுமே கிறிஸ்தவராக உள்ளார். அவரது செயல்பாடுகள் அந்த மதத்தின் கோட்பாடுகளுக்கு இணங்கச் செயல் அளவில் இல்லை. தனது சொந்தக் குடும்பத்தையே சரியாகக் காப்பாற்றத் தெரியாத ஒருவருக்கு, தமிழக மக்கள் எப்படித் தங்களது ஆதரவை வழங்குவார்கள் என்ற கேள்வி எழுகிறது.

கிறிஸ்தவர்கள் வெறும் மதத்தைப் பார்த்து மட்டுமே ஒருவருக்கு வாக்கு செலுத்த மாட்டார்கள். வேட்பாளரின் தகுதி மற்றும் செயல்பாடுகளை வைத்தே முடிவெடுப்பார்கள்.

விஜய் பெயரளவில் தான் கிறிஸ்தவராக உள்ளார் என்ற இந்த விமர்சனம் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது. ஒரு கட்சியின் தலைவரை மதம் சார்ந்த ரீதியிலும், குடும்பப் பின்னணி ரீதியிலும் விமர்சித்திருப்பது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், “செயல் அளவில் இல்லாத ஒருவரை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்” என்பதில் அருட்தந்தை சார்லஸ் குமார் உறுதியாக இருப்பதாகத் தெரிகிறது.

மேலும் விஜய் இன்னும் அரசியல்வாதியாக மாறவில்லை எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை ஒரு சினிமா நடிகராக மட்டுமே இருக்கிறார் என்று கூறியவர் ஆர்எஸ்எஸ் கைப்பாவையாக இல்லாத திமுக கூட்டணிக்கு தான் எங்களுடைய ஓட்டு என்று திட்டவட்டமாக கூறினார்.