பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞர் சங்கத் தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த ஜி.கே.எம். தமிழ்குமரன், கட்சிப் பொறுப்பு மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாமக நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜி.கே.எம். தமிழ்குமரன் (த/பெ ஜி.கே.மணி), கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு பாமக மாநில இளைஞர் சங்கத் தலைவராக நியமிக்கப்பட்டார். எனினும், அவர் தமக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளில் ஆர்வம் காட்டாமலும், கட்சிப் பணிகளில் ஈடுபடாமலும் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தற்போது பாட்டாளி மக்கள் கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையிலும், கட்சிக்குத் துரோகம் செய்யும் வகையிலும் செயல்பாடுகளில் ஈடுபட்டது உறுதியானது.

இதன் காரணமாக, ஜி.கே.எம். தமிழ்குமரன் இன்று (27.03.2026) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார். எனவே, கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் அவரோடு எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என மருத்துவர் ராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

மேலும் முன்னதாக தமிழ் குமரன் காங்கிரஸ் கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைந்தது குறிப்பிடத்தக்கது. இவர் ஜிகே மணியின் மகன் என்பது கூடுதல் தகவலாகும்.