கரூரில் கடந்த மாதம் 27-ந் தேதி நடைபெற்ற த.வெ.க பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உண்மையான காரணங்களை கண்டறிய , ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கரூர் போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் மீது ஐந்து பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நடிகர் விஜய், இந்த நிகழ்வுக்குப் பிறகு வெளியிட்ட வீடியோவில், “தொண்டர்களை கைது செய்வதை விட்டு விட்டு, பழிவாங்கும் நோக்கில் செயல்பட விரும்பினால், என்னை கைது செய்யுங்கள்” எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் மற்றும் இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர், போலீசார் தேடி வருவதை முன்னிட்டு முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதி ஜோதி ராமன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடக்கநிலையில் இருப்பதால், முன் ஜாமீன் வழங்க இயலாது எனக் கூறி, நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார். இதனையடுத்து, போலீசார் தனிப்படைகள் அமைத்து தேடிவரும் நிலையில், இருவரும் எந்த நேரத்திலும் கைது செய்யப்படக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்த ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவுக்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்கிற ஐ.ஜி. அஸ்ரா கார்க், தமிழ்நாட்டின் முக்கியமான உயர் அதிகாரிகளில் ஒருவர் ஆவார். தற்போது தமிழ்நாடு *வடக்கு மண்டல ஐ.ஜி.*யாக பணியாற்றி வருகிறார். இவரின் நேர்மை, தைரியம் மற்றும் அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடையே பாராட்டுப் பெற்றுள்ளன.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அஸ்ரா கார்க், தாபர் பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார். 2004-ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு கேடரில் பணியில் சேர்ந்தார். திருப்பத்தூரில் உதவி கண்காணிப்பாளராக பணியைத் தொடங்கினார். திருநெல்வேலி எஸ்பியாக பணிபுரிந்த காலத்தில் கந்துவட்டி கொடுமையை ஒழிக்க சிறப்புப் படை அமைத்து நடவடிக்கை எடுத்தார். மதுரையில், கிரானைட் முறைகேடு, நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளில் அதிரடியாக செயல்பட்டார். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கவும் விரைந்து செயல்பட்டார்.
தர்மபுரி, தேனி, உத்தமபாளையம் உள்ளிட்ட இடங்களில் சமூக நீதியை வலியுறுத்தும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளார். மத்திய புலனாய்வு பிரிவிலும் (IB) பணியாற்றிய அனுபவம் பெற்றவர். குருக்ராமில் பள்ளி மாணவர் கொலை வழக்கில் உண்மையை வெளிக்கொணர்ந்தார். சிபிஐ லஞ்ச வழக்கில், லஞ்சம் கொடுக்க முயன்றவர்களையே கைது செய்த தைரியமான நடவடிக்கையும் எடுத்துள்ளார்.
மேலும் அஸ்ரா கார்க்கு தமிழ்நாடு முதலமைச்சர் விருது, காவல் சேவை பதக்கம் உள்ளிட்ட பல பரிசுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போதும் முக்கிய வழக்குகளில் நேர்மையாக செயல்பட்டு வருகிறார். கரூர் சம்பவத்தின் விசாரணை அவரது நேர்மைக்கும், காவல்துறை தன்மைக்கும் ஒரு முக்கியமான சோதனையாக பார்க்கப்படுகிறது.
