தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய், வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வை வீழ்த்துவதே தனது இலக்கு என்று களமிறங்கியுள்ளார். சில கருத்துக்கணிப்புகள் தவெக 18 சதவீத வாக்குகளைப் பெறும் எனக் கூறுவது மற்ற கட்சிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், வேலூர் கூட்டத்தில் பேசிய விஜய், தன்னை விமர்சிப்பவர்களுக்குத் தன் பாணியில் பதிலடி கொடுத்தார். “என்னை நக்கலடித்தால் அது இந்தத் தமிழக மக்களைக் கிண்டலடிப்பதாக அர்த்தம். ஏனென்றால், நான் இந்தத் தமிழக மக்களின் முகமாக இருக்கிறேன். எனக்கும் மக்களுக்கும் இடையிலான உறவு யாராலும் பிரிக்க முடியாத ரத்த சொந்தம். நான்தான் தமிழ்நாடு” என்று மிக ஆவேசமாகப் பேசி தனது அரசியல் பலத்தை வெளிப்படுத்தினார்.
விஜய்யின் இந்த “நான்தான் தமிழ்நாடு” என்ற பேச்சுக்கு திமுக தரப்பில் இருந்து மிகக் கடுமையான எதிர்வினை வந்துள்ளது. இது குறித்துப் பேசிய திமுக மூத்த தலைவர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், விஜய்யின் பேச்சை மிகக் கடுமையாகச் சாடினார். “விஜய் தன்னைச் சுற்றித்தான் தமிழ்நாடு இயங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார்” என்று விமர்சித்த அவர், விஜய்யின் இனப்பற்று குறித்து ஒரு பழைய விவகாரத்தைக் கிளப்பினார். 2009-ல் ஈழத்தில் இனப்படுகொலை நடந்தபோது, திரையுலகினர் திரட்டிய நிதியில் சாதாரணக் கலைஞர்களே 5000 ரூபாய் வரை கொடுத்தபோது, ஒரு முன்னணி நடிகராக இருந்த விஜய் வெறும் 500 ரூபாய் மட்டுமே கொடுத்ததாகக் குற்றம் சாட்டினார். “வெறும் 500 ரூபாய் கொடுத்தவருக்குத் தான் இனப்பற்று இருக்கிறதா? உங்கள் பின்னால் தமிழ்நாடு எப்படி நிற்கும்?” என அவர் கேட்ட கேள்வி இப்போது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
