கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகை கஸ்தூரி, தற்போதைய தவெக ஆட்சியைத் திமுக விமர்சிப்பது குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார். “தவெக ஆட்சியைத் திமுக விமர்சிக்கிறது என்றால், முதலமைச்சர் விஜய் நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார் என்பதற்கான அறிகுறி” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தற்போதைய தவெக அரசு அமைந்த பிறகு புதிய எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அதிகாரிகள் பணிகளை முழுமையாகக் கற்றுக்கொள்ள மக்களுக்குச் சிறிது கால அவகாசம் கொடுத்து ஆதரவு அளிக்க வேண்டும் என்றும், தேர்தலில் பெரிய அளவில் தோல்வியைச் சந்தித்த திமுகவினர் இன்னும் 5 ஆண்டுகளுக்கு இப்படியே கத்திக் கொண்டேதான் இருக்கப் போகிறார்கள் என்றும் அவர்அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.

தவெக அரசின் டாஸ்மாக் கடைகள் மூடல் நடவடிக்கையை வரவேற்றுள்ள கஸ்தூரி, குடிபோதையில் இருப்பவர்கள் தெருக்களையே பார்களாக மாற்றி வைத்திருந்த நிலையில் இது நல்ல விஷயம் எனப் பாராட்டியுள்ளார். அதேசமயம், “பாட்டிலுக்கு 10 ரூபாய் என முன்பு பாடிய நிலையில், தற்போதும் அந்த 10 ரூபாய் லஞ்சம் தொடர்கிறது என்றால் அடிமட்ட அதிகாரிகள் மாறுவது கடினம்; அது தொடர்பான கட்டமைப்பு குறித்து முதலமைச்சர் விஜய்க்கு இன்னும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை” எனச் சுட்டிக்காட்டியுள்ளார்.

மத்திய அரசை எதிர்த்து விஜய் அரசியல் செய்வார் எனத் தான் நினைக்கவில்லை என்று கூறிய அவர், கொள்கை எதிரி என்று சொன்னாலும் மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதே உண்மையான கொள்கையாக இருக்க முடியும் எனத் தனது பேட்டியில் விவரித்துள்ளார்.