திருத்தணி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் சத்திய குமார், கட்சியினரின் ஒத்துழைப்பு இன்றித் தனியாகப் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது. கட்சித் தலைவர் விஜய் “தனித்துப் போட்டி” என்று அறிவித்ததை, வேட்பாளர் “தனி ஆளாகப் பிரச்சாரம் செய்வது” எனத் தவறாகப் புரிந்து கொண்டாரோ என்று நெட்டிசன்கள் கேலி செய்து வருகின்றனர்.
மேலும் போதிய ஆள் பலம் மற்றும் பண பலம் இல்லாதது ஒருபுறமிருக்க, உள்ளூர் நிர்வாகிகளுடன் இணக்கமாகச் செயல்படாததே சத்திய குமார் தனித்து விடப்பட்டதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது. நிர்வாகிகளின் குற்றச்சாட்டுப்படி, பிரச்சாரத்திற்கு வாகனம் ஏற்பாடு செய்யாமல் அனைவரையும் சைக்கிளில் வருமாறு வேட்பாளர் கட்டாயப்படுத்துவதாகவும், கூட்டமாக வருவதை விட வீடியோ பதிவுகள் மூலமே வாக்குகளைப் பெற்றுவிடலாம் என அலட்சியமாகப் பேசுவதாகவும் தெரியவருகிறது.
இந்நிலையில் கட்சித் தொண்டர்களைக் கஞ்சா போதையில் இருப்பதாகக் கூறி இழிவுபடுத்தியதால் ஆத்திரமடைந்த நிர்வாகிகள், அவருக்கு 100 சதவீதம் தேர்தல் வேலை செய்யப் போவதில்லை என அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்த உட்கட்சிப் பூசலால் திருத்தணி தொகுதியில் தவெகவின் தேர்தல் களம் தள்ளாட்டத்தில் உள்ளது.
