தமிழக வெற்றிக் கழகம் தொடங்கப்பட்ட பின்னர், அக்கட்சியின் தலைவர் விஜய் இன்று (டிசம்பர் 9) புதுச்சேரியில் உப்பளம் மைதானத்தில் முதல் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை நடத்துகிறார். இதனால், மைதானம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கூட்டத்திற்கு வந்த தவெக பிரமுகர் ஒருவரை கைத்துப்பாக்கியுடன் போலீசார் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைதானத்திற்குள் நுழைந்த நபர்களை மெட்டல் டிடெக்டர் (Metal Detector) கருவி மூலம் போலீசார் சோதனையிட்டபோது, அந்த நபர் மறைத்து வைத்திருந்த துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவரைப் பிடித்து விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்ற போலீசார், அவரிடம் துப்பாக்கி வைத்திருந்தது ஏன், யாருடைய உத்தரவின் பேரில் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். விஜய்யின் முதல் மக்கள் சந்திப்பில் நடந்த இந்தச் சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
