“டிரைவர் மகனை கொறடாவாக்கினோம் என்று த.வெ.க பெருமை பேசுகிறது. ஆனால், திமுக தனது ஓட்டுநரையே (ஆர்.வி.ஜானகிராமன்) புதுச்சேரியின் முதலமைச்சராக்கி அழகு பார்த்த இயக்கம்” என்று திமுக வர்த்தகர் அணி செயலாளரும் கவிஞருமான காசிமுத்துமாணிக்கம் த.வெ.க-வுக்குக் கடுமையான பதிலடி கொடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தலித் மக்களைப் பொதுத் தொகுதியில் நிறுத்துவது குறித்து த.வெ.க-வின் ஆதவ் அர்ஜுனா பேசியதற்கு மறுப்பு தெரிவித்துள்ள அவர், தலித் மக்களைப் பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைக்கும் வழக்கத்தைத் தொடங்கி வைத்ததே திராவிட இயக்கமான திமுகதான் என்றும், கோவை தண்டாயுதபாணி, திருச்சி தலித் எழில்மலை, நடிகர் நம்பியாரின் மகன் சுகுமாரன், விசிக பன்னீர்தாஸ் எனப் பலரை பொதுத் தொகுதியில் நிறுத்தி வெற்றி பெற வைத்த வரலாறு ஆதவுக்குத் தெரியவில்லை என்றும் சாடியுள்ளார்.
மேலும், தற்போதைய த.வெ.க அரசின் தேர்தல் வெற்றி குறித்தும், திமுகவின் தேர்தல் பின்னடைவு குறித்தும் அவர் தனது அறிக்கையில் விரிவாகப் பேசியுள்ளார். “2006 தேர்தலில் கலைஞர் தலைமையிலான கூட்டணிதான் அதிக இடங்களைப் பெற்று ஆட்சியமைத்தது. ஆனால், த.வெ.க-வினர் இன்று தங்களை எதிர்த்து வாக்கு வாங்கி வென்றவர்களிடம் போய் கெஞ்சிக் கூத்தாடி, ஆதரவுக் கடிதம் வாங்கி ஆட்சி அமைத்துள்ளனர். ‘இன்று போய் நாளை வா’ என ராமன் போட்ட பிச்சையில் ராவணன் வாழ்ந்தது போல, திமுக கூட்டணி போட்ட பிச்சையில்தான் த.வெ.க இன்று அரசமைத்துள்ளது. அண்ணா தோற்றபோதும், ஜெயலலிதா தோற்றபோதும் கட்சிகள் அழியவில்லை. அதுபோல, தற்போது தளபதி தோற்றதால் திமுக அழிந்துவிடாது; வீழ்வதும் எழுவதும் கடல் அலைக்கும் கதிரவனுக்கும் பழக்கம். எய்ட்ஸ் வந்த கட்சிகளே எழுந்துவிட்டன, இருமல் வந்த நாங்களா எழுந்து நிற்க மாட்டோம்? திமுக பீனிக்ஸ் பறவை போல மீண்டும் மிக விரைவில் அரியணையில் அமரும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், தற்போதைய த.வெ.க அரசின் சட்டம் ஒழுங்கு சீர்கேடு குறித்தும் அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். கொளத்தூரில் தமிழக வெற்றிக் கழக வட்டச் செயலாளர் சிறுமி ஒருவரைச் சீரழித்த விவகாரத்தில் இன்னும் கட்சி ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று சாடிய அவர், தேசத்தைக் காத்து வந்த தமிழ்நாட்டின் இரண்டு ராணுவ வீரர்கள் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டியுள்ளார். காஷ்மீரில் பணியாற்றி வந்த ராணுவ வீரர் மகேஷ்குமார் மற்றும் அவரது தந்தை செல்லப்பன் ஆகியோர் கிருஷ்ணகிரி அருகே குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கைக் காற்றில் பறக்கவிட்டு, எந்தக் கட்சியை முழுமையாக இழுக்கலாம், எதைப் பிரிக்கலாம் என்று முதலமைச்சர் விஜய் சிந்தித்துக் கொண்டிருக்கிறார் என்றும், அரசியல் சூழ்ச்சிகளை நிறுத்திவிட்டு உடனடியாக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும் என்றும் காசிமுத்துமாணிக்கம் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
