தமிழகத்தில் அண்மைக்காலமாக அரங்கேறி வரும் தொடர் கொலைச் சம்பவங்கள், பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை தீவிரப்படுத்தியுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அருகே பகுதிநேர வேலை பார்த்து வந்த கல்லூரி மாணவர்கள் வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம், தூத்துக்குடி மற்றும் கோவில்பட்டி பகுதிகளில் நடந்த மதுப்போதை மற்றும் தகராறு சார்ந்த கொலைகள், சேலம் அருகே சக மாணவர்களால் மாணவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட கொடூர நிகழ்வு என நாளுக்கு நாள் நீளும் இந்த வன்முறைப் பட்டியல் மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கடந்த காலங்களில் நிலவிய சட்டம்-ஒழுங்கு சீர்குலைவும், காவல்துறையினரின் கைகள் கட்டப்பட்டிருந்ததாக எழுந்த விமர்சனங்களும் புதிய ஆட்சியிலும் தொடர்கிறதோ என்ற நியாயமான சந்தேகத்தை தற்போது மக்கள் மத்தியில் விதைக்கத் தொடங்கியுள்ளன.

எனவே, புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசும், அதன் முதலமைச்சரும் இந்த விவகாரத்தில் உடனடியாகக் கவனம் செலுத்த வேண்டும். ஒரு மாநில நிர்வாகத்தின் முதன்மைக் கடமை என்பது குற்றங்கள் நடந்த பிறகு குற்றவாளிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்ல, அத்தகைய குற்றங்கள் நிகழாவண்ணம் தடுத்து பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு முழுப் பாதுகாப்பு அளிப்பதே ஆகும்.

இந்நிலையில் மக்களின் அச்சத்தைப் போக்கி, சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட தவெக அரசு தனது காவல் துறையைத் சுதந்தரமாகவும், அதிரடியாகவும் செயல்பட அனுமதித்து, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறது என்பதைச் செயலில் நிரூபிக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.