தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், அக்கட்சியின் தேர்தல் தாக்கம் குறித்து பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் வியந்து பேசியுள்ளார். அண்மையில் நடைபெற்ற தேர்தலில், பலம் வாய்ந்த திமுக மற்றும் அதிமுக கூட்டணிகளை எதிர்த்து தனித்து களம் கண்ட தவெக 108 தொகுதிகளில் வென்று சாதனை படைத்தது.

இது குறித்து மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த தமிழிசை சௌந்தர்ராஜன் கூறுகையில், தவெகவின் அரசியல் தாக்கம் அனைத்துக் கட்சிகளையும் வீழ்த்தும் அளவுக்கு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெக 35 சதவீத வாக்குகளைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்ற கணிப்பு மிகக் குறைவாகவே இருந்தது என்றும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதனால் தவெகவின் இந்த அசாத்திய வளர்ச்சி எளிய மக்களைச் சென்றடைந்த விதம் குறித்து விவரித்த தமிழிசை, “எப்போது நீங்கள் ஆட்டோ ஓட்டுநர்கள், பூ விற்கும் பெண்கள் மற்றும் மீன் விற்கும் எளிய சகோதரிகளைச் சென்றடைகிறீர்களோ, அப்போதுதான் உண்மையான தலைவராக உருவெடுக்கிறீர்கள் என்று என் தந்தை கூறுவார்” என நினைவுகூர்ந்தார்.

இந்நிலையில் ஒருமுறை தான் கல்லூரிக்கு அருகில் பூ வாங்கச் சென்றபோது, அங்கிருந்த பூ விற்கும் பெண்மணி தவெக கட்சியின் பாடலை தனது மொபைல் காலர் ட்யூனாக வைத்திருந்ததைக் கண்டு வியந்ததாகக் குறிப்பிட்டார். கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் தவெகவின் சீருடை பாணி பெரும் பிரபலமாகி உள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், பாராட்டியுள்ளார்.