தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் முன்னாள் மேலாளரும், திரைப்படத் தயாரிப்பாளருமான பி.டி.செல்வகுமார் அண்மையில் திமுகவில் இணைந்தார். அவருக்கு திமுக வர்த்தகர் அணியின் மாநில துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

பதவிப் பிரமாணத்திற்குப் பிறகு, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் மேயர் மகேசிடம் வாழ்த்துப் பெற்ற பி.டி.செல்வகுமார், செய்தியாளர்களிடம் பேசுகையில் விஜய்யை மிகக் கடுமையாக விமர்சித்தார்.

செய்தியாளர் சந்திப்பில் பி.டி.செல்வகுமார் கூறியதாவது: த.வெ.க தலைவர் விஜய் இத்தனை ஆண்டுகளாகத் தனது ரசிகர்களுக்கு அநியாயமே செய்து வந்துள்ளார். எந்த ஒரு ரசிகருக்கும் அவர் நல்லது செய்ததில்லை. கரூரில் 41 பேர் உயிரிழந்த துயரமான சம்பவத்தின் போது, ‘தப்பித்தால் போதும்’ என அங்கிருந்து ஓடியவர் அவர். சினிமா துறையிலும் சரி, சக நடிகர்களுக்கும் சரி அவர் எவ்வித உதவியும் செய்ததில்லை.

உடன் இருப்பவர்களை வாழ வைப்பவனே நல்ல தலைவன். நான் இத்தனை காலம் அவருடன் இருந்தது ஒரு பாவம். இப்போது திமுகவில் இணைந்ததன் மூலம் அதற்கு விமோசனம் தேடிக்கொண்டேன்.

த.வெ.க-வில் இணைந்துள்ள முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஒரு போலி அரசியல்வாதி. 50 ஆண்டுகால அரசியலில் அவர் பெரும் செல்வம் சேர்த்து வைத்துள்ளார். தற்போது ஓய்வெடுக்க ஒரு இடம் தேவை என்பதால் அவர் விஜய்யுடன் இணைந்துள்ளார். வரும் தேர்தலில் அவர் நிச்சயம் டெபாசிட் இழப்பார்.

மேலும் விஜய் ஒரு துரோகி. இளைஞர்கள் அவரை நம்பிப் பணத்தைச் செலவு செய்ய வேண்டாம். தேர்தலில் ஒருவேளை தோல்வியடைந்தால், அவர் உடனடியாக வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிடுவார். விஜய்க்குத் தோல்வி என்றாலே பிடிக்காது. தோல்வியடைந்த படத்தின் தயாரிப்பாளர்கள் அவரைச் சந்திக்க வந்தால், ‘நான் வீட்டில் இல்லை’ என்று சொல்லச் சொல்லிவிட்டு ஒளிந்து கொள்வார். அத்தகைய மனப்பக்குவம் கொண்டவர் அவர். இளைஞர்களுக்கு விஜய்யின் வருகை பெரும் ஆபத்தானது. இவ்வாறு பி.டி.செல்வகுமார் ஆவேசமாகப் பேசினார்.