திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள், அந்த அரசு செய்யும் தவறுகளைத் தட்டிக்கேட்காமல் ‘தாலி கட்டிய மனைவி’ போலப் பவ்யமாக உள்ளன என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் சாடினார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த செல்லூர் ராஜு கூறியதாவது: மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரு சில சதவீத ஜி.எஸ்.டி வரி விதிப்பதைக் காரணம் காட்டி, தமிழகத்தின் விலைவாசி உயர்வை நியாயப்படுத்த வேண்டாம். அதிமுக ஆட்சிக் காலத்தில் வெங்காயம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்தபோது, உடனடியாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விலைவாசியைக் கட்டுக்குள் வைத்திருந்தோம். ஆனால் தற்போது திமுக ஆட்சியில் விலைவாசி உயர்வால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் வாக்குகள் சிதறாமல் இருக்கக் கூட்டணி அமைப்பது இயல்பு. ஆனால், திமுக ஆட்சியில் நடக்கும் மக்கள் பிரச்சினைகளைக் கண்டு கொள்ளாமல் விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் மௌனம் காக்கின்றன. அவர்கள் ஏழை மக்களுக்காகக் குரல் கொடுப்பதை விட்டுவிட்டு, வரும் தேர்தலில் ‘சீட்’ வாங்குவதிலேயே குறியாக உள்ளனர்.
இந்தியாவிலேயே பட்டியலின மக்களும், பெண்களும் அதிகமாகப் பாதிக்கப்படும் மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது எனப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நாள்தோறும் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகும் அவலம் நீடிக்கிறது.
தற்போது ஆளும் கட்சிக்கு எதிராக மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது. ‘எதிர்ப்பு அலை இல்லை’ என முதல்வர் யாரிடம் கேட்டார் என்று தெரியவில்லை. சாதாரண மக்களைச் சந்தித்துப் பேசினால் மட்டுமே உண்மை நிலவரம் புரியும். சாதனைகளைச் சொல்லி ஓட்டு கேட்பதை விட்டுவிட்டு, மக்களைத் திசைதிருப்ப வேண்டாம்.
கடந்த 2011-ஆம் ஆண்டு திமுக சந்தித்த அதே வீழ்ச்சியை 2026-லும் சந்திக்கும். அப்போது திமுக எதிர்க்கட்சியாகக் கூட அமர முடியாது. ‘ரியல் ஹீரோ’ எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழக முதல்வராவது உறுதி என்றார்.
