தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். முதற்கட்டமாக, கடந்த சனிக்கிழமை திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்ட அவர், இன்று இரண்டாவது கட்டப் பிரசாரத்தை நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் நடத்தினார். இன்று பிற்பகல், நாகப்பட்டினத்தில் தொண்டர்கள் படை சூழ உற்சாகமாகத் தனது பிரசாரத்தைத் தொடங்கினார். திருச்சி, அரியலூர் பயணங்களைப் போலவே, நாகையிலும் ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டம் அலைமோதியது. பிரசாரத்தில் விஜய், மக்களின் பிரச்னைகளை எடுத்துரைத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார்.
நாகப்பட்டினம் பயணத்தை முடித்துக்கொண்டு, திருவாரூருக்கு சென்ற விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆனால், திருவாரூரில் பிரசாரம் நடைபெறவிருந்த பகுதியில், த.வெ.க. தொண்டர்கள் சிலர் அங்குள்ள கோவில் கோபுரத்தின் மீது ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அறிந்த காவல்துறையினர், உடனடியாக தலையிட்டு, கோபுரத்தில் ஏறிய த.வெ.க.வினரை அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் தற்காலிகமாக பரபரப்பை ஏற்படுத்தினாலும், பிரசாரம் தொடர்ந்து உற்சாகமாக நடைபெற்றது. விஜய்யின் இந்த சுற்றுப்பயணம், தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
