தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் போட்ட கூட்டணிக் கணக்குகள் அனைத்தும் தவிடு பொடியாகியுள்ளன. பெரிய கட்சிகளை மிரட்டி அதிக இடங்களைப் பெற மற்ற கட்சிகள் விஜய்யைப் பயன்படுத்திக் கொண்டனரே தவிர, அவருடன் கூட்டணி அமைக்க யாரும் முன்வரவில்லை.
காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளிடம் தூது அனுப்பியும் பலன் கிடைக்காததால், தற்போது தனித்து போட்டியிட வேண்டிய கட்டாயத்திற்கு விஜய் தள்ளப்பட்டுள்ளார். சினிமா போல அரசியலிலும் ஒரே நாளில் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம் என நினைத்த விஜய்க்கு, தரைமட்ட யதார்த்தம் இப்போதுதான் புரியத் தொடங்கியுள்ளது.
கட்சியின் உள்ளேயே நிலவும் கோஷ்டி மோதல்களும், மாவட்ட அளவில் நிர்வாகிகளிடையே இருக்கும் அதிருப்தியும் தவெகவின் பலத்தை வெகுவாகக் குறைத்துள்ளன.
மறுபுறம், ஆரம்பத்தில் பாஜகவை ‘கொள்கை எதிரி’ என்று விமர்சித்த விஜய், சமீபகாலமாக அவர்களைப் பற்றிப் பேசாமல் தவிர்த்து வருவது பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது. கூட்டத்தைக் கண்டு உற்சாகமடைந்தாலும், தேர்தல் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது அக்கட்சியினரிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
விருப்ப மனுக்கள் வாங்கியவர்களில் மிகக் குறைந்த அளவினரே அவற்றைச் சமர்ப்பித்திருப்பது அக்கட்சியின் தற்போதைய நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. சமூக வலைதளங்களில் கிடைக்கும் வரவேற்பு மட்டுமே தேர்தல் வெற்றியைத் தந்துவிடாது என்பதை வரும் தேர்தல் களம் விஜய்க்குப் புரிய வைக்கும் என அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
