தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) யாருடன் கூட்டணி அமைக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. குறிப்பாக, பாஜக தலைமையிலான என்டிஏ  கூட்டணியில் விஜய் இணைய வாய்ப்புள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியும் விஜய்க்கு துணை முதல்வர் பதவியும் வழங்கப் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தவெக-வுடன் இதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை எனத் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறார். விஜய்யின் வருகை தனது அரசியல் பிம்பத்தைச் சிதைத்துவிடுமோ அல்லது எதிர்காலத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற அச்சமே இபிஎஸ்-ஸின் இந்த முட்டுக்கட்டைக்குக் காரணம் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

மறுபுறம், பாஜக மேலிடம் விஜய்யை ஒரு முக்கிய சக்தியாகக் கருதுவதால், ஒருவேளை அவர் கூட்டணிக்கு வந்தால் அவருக்கு முதல்வர் பதவி கூட வழங்கப்படலாம் என்ற யூகங்கள் அதிமுகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பல தசாப்தங்களாகத் தமிழக அரசியலில் கோலோச்சும் அதிமுக, புதிய கட்சியான தவெக-வுக்கு அதிகாரத்தை விட்டுக்கொடுக்க விரும்புவதில்லை. 2026 தேர்தல் இபிஎஸ்-ஸிற்கு வாழ்வா? சாவா? போராட்டமாக இருக்கும் நிலையில், விஜய்யின் “மாஸ்” பிம்பம் தனது செல்வாக்கைக் குறைத்துவிடுமோ என அவர் அஞ்சுவதாகக் கூறப்படுகிறது.

விஜய் தனித்துப்போட்டியிடுவாரா அல்லது கடைசி நேரத்தில் என்டிஏ கூட்டணியில் இணைந்து ஆச்சரியம் அளிப்பாரா என்பது இன்னும் சில நாட்களில் உறுதியாகிவிடும்.