பாஜக அரசு நடிகர் விஜய்க்கு நெருக்கடி கொடுப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்குத் தமிழக பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விளக்கம் அளித்துள்ளார். கரூர் விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்குச் சம்மன் அனுப்பியது மற்றும் ஜனநாயகன் படத்திற்குத் தணிக்கை சான்றிதழ் தாமதமானது போன்ற நிகழ்வுகள் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என எதிர்க்கட்சிகள் கூறி வருகின்றன.
இதற்குப் பதிலளித்த எச்.ராஜா, காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான் சிபிஐ போன்ற அமைப்புகள் அரசியல் காரணங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டதாகவும், பாஜக ஒருபோதும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தாது என்றும் கூறியுள்ளார்.
மேலும், தாங்கள் நெருக்கடி கொடுக்க நினைத்திருந்தால் செப்டம்பர் 27-ம் தேதியே கொடுத்திருப்போம் என்றும், அப்படிச் செய்திருந்தால் விஜய் வெளியே வந்திருக்க முடியாது என்றும் அவர் அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
சிபிஐ ஒரு சுதந்திரமான அமைப்பு என்றும், நீதிமன்ற உத்தரவின்படிதான் விசாரணை நடைபெறுவதாகவும் எச்.ராஜா குறிப்பிட்டுள்ளார். திமுகவுடன் கூட்டணியில் இருந்தபோதே ஆ.ராஜா மற்றும் கனிமொழியை காங்கிரஸ் அரசு சிறையில் அடைத்ததைச் சுட்டிக்காட்டிய அவர், ஒருவரது பலவீனத்தைப் பயன்படுத்தி அரசியல் செய்வது பாஜகவின் பழக்கம் இல்லை என்றார்.
சம்பவம் நடந்த இடத்தில் விஜய் இருந்த காரணத்தினாலேயே சிபிஐ அவரை விசாரணைக்கு அழைத்துள்ளதாகவும், தணிக்கை வாரியம் தனது விதிகளின்படிதான் செயல்படுகிறது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசு எந்த விதத்திலும் விஜய்க்கு முட்டுக்கட்டை போடவில்லை என்பதே பாஜகவின் நிலைப்பாடாக உள்ளது.
