புதுச்சேரியில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில், மத்திய அரசு புதுச்சேரி வளர்ச்சியை புறக்கணிப்பதாக தவெக தலைவர் விஜய் கூறியிருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நிருபர்களிடம் பேசியது வருமாறு: “விஜய், யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் நிர்வாக அமைப்பு குறித்து முழுமையாக அறியாமல் பேசுகிறார். அவருக்கு தகவல் வழங்கியவர்களே சரியாக தெரிவிக்கவில்லை,” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: “விஜயின் உரையில் 90% தகவல்கள் தவறானவை. தமிழகத்தில் அவர் திறந்தவெளியில் பேச முடியாததால், புதுச்சேரியில் ஏதேனும் குறை சொல்லி பேச வேண்டும் என்ற நோக்கத்தில்தான் வந்துள்ளார். 12 நிமிட உரையில் சில குறைகள் சொல்லிவிட்டு திரும்பிச் சென்றார்.”

ரேஷன் அரிசி குறித்த அவரது குற்றச்சாட்டை மறுத்த நமச்சிவாயம், “பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு நேரடி பணப் பரிமாற்ற திட்டம் செயலிலிருந்தது. தேர்தலின்போது மக்கள் அரிசி வேண்டும் என்று வலியுறுத்தியதால், மத்திய அரசின் அனுமதியுடன் இலவச அரிசி வழங்கும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட்டது. தற்போது ஒவ்வொரு மாதமும் அரிசி சரியாக வழங்கப்படுகிறது. இது பற்றி விஜய்க்கு தகவல் இல்லை,” என்றார்.

கூட்டணி அரசியல் குறித்து, “தேர்தல் நேரத்தில் தான் யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பது தீர்மானிக்கப்படும். இப்போது யாரும் எந்த வகையில் பேசினாலும் அது ஊகங்களே,” என்றார். விஜயின் அரசியல் திறனை விமர்சித்த அவர், “கரூர் சம்பவத்துக்கு பிறகு வெளியில் பெரிய கூட்டம் நடத்த அவரால் முடியவில்லை. காஞ்சிபுரத்திலும் உள்ளரங்கில் இரண்டு ஆயிரம் பேருடன் மட்டுமே கூட்டம் நடத்த முடிந்தது. புதுச்சேரியில் கூட்டம் நடத்த அனுமதி கிடைத்ததற்காக அவர் முதலமைச்சர் ரங்கசாமிக்கு நன்றி கூறியுள்ளார்,” என்றார். மேலும் இறுதியாக, 2026-ஆம் ஆண்டு புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.