அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்கள் (ITI) அமைப்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை மற்றும் வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை இணைந்து ஆலோசனை நடத்தியுள்ளது. இந்த ஆலோசனையின் பேரில், மாநிலம் முழுவதும் தகுதியுள்ள பள்ளிகளைத் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து பள்ளிக்கல்வி இயக்குனர், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: ஒவ்வொரு பள்ளியிலும் ஐ.டி.ஐ. அமைக்க குறைந்தது 50 சென்ட் நிலம் இருக்க வேண்டும். தொழில்துறை பயிற்சி நிலையங்கள் இல்லாத பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

தொழில் மண்டலங்கள், தொழிற்சாலைகள் மற்றும் தொழில்துறை பகுதிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள் முதன்மையாக தேர்வு செய்யப்படும், இதன் மூலம் தொழில் இணைப்புத் திட்டங்கள் மற்றும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு வாய்ப்புகள் மேம்படும். தகுதி வாய்ந்த அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் விவரங்களைத் தொகுத்து பள்ளிக்கல்வித்துறைக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அரசுப் பள்ளிகளில் தொழில்துறை பயிற்சி மையங்களை அமைப்பதன் மூலம், மாணவர்கள் பள்ளிக் காலத்தில் இருந்தபடியே தொழில்திறன்களை அறிந்து  வேலைவாய்ப்புகள் பெற உதவுவது இதன் நோக்கமாகும்.