அதிமுக ஆட்சிக் காலத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவந்தார் என்றும், ஆனால் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இதுவரை ஒரு புதிய மருத்துவக் கல்லூரியையாவது கொண்டு வந்தாரா என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக அரசு தங்களை ‘டபுள் இன்ஜின்’ அரசுக்கு எதிராக ‘டப்பா இன்ஜின்’ என்று விமர்சிப்பதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தில் தற்போது நடப்பது ‘கஞ்சா இன்ஜின்’ அரசா என மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். அரசின் செயல்பாடுகளைக் கிண்டல் செய்யும் விதமாக அமைந்த இந்த பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவை விமர்சிப்பதற்கு நடிகர் விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை என்றும் நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். விஜய் இன்னும் ஒரு கவுன்சிலராகக் கூட ஆகவில்லை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், வெறும் விசில் அடித்துக் கொண்டிருந்தால் மட்டும் அரசியல் மாற்றம் ஏதும் நடந்துவிடாது எனத் தெரிவித்தார். அதிமுக போன்ற அனுபவம் வாய்ந்த கட்சியை விமர்சிப்பதற்கு முன் களப்பணியில் ஈடுபட்டு தகுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் விஜய்யின் அரசியல் வருகையை அவர் விமர்சித்துள்ளார்.
