தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ள நிலையில், இதற்குப் பின்னால் பாஜகவின் ‘மாஸ்டர் பிளான்’ இருப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். “விஜயைத் தனித்துப் போட்டியிட வைத்ததே பாஜகதான்” என அவர் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
குறிப்பாக, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் வாக்குகளை விஜய் பிரித்தால், அது திமுகவின் வெற்றியைப் பாதிக்கும் என்றும், அந்த வாக்குகளைச் சிதறடித்து அதன்மூலம் ஆதாயம் அடைய பாஜக நினைப்பதாகவும் அவர் சாடியுள்ளார். “விஜய் எதிர்க்கும் சித்தாந்தம் வேறாக இருந்தாலும், பாஜக அவருக்குத் திரைமறைவில் வியூகம் வகுத்துக் கொடுக்கிறது” எனத் திருமாவளவன் எச்சரித்துள்ளார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் திருமா, விஜய்யின் இந்தத் தனித்துப் போட்டி முடிவை பாஜகவின் ஒரு கருவியாகப் பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.
