தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு தீவிர அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில், அவரை பா.ஜ.க மூத்த தலைவர் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார். சமீபத்தில் காரைக்குடியில் விஜய் சைக்கிள் ஓட்டிச் சென்றது மற்றும் தொண்டர்களை நோக்கி கைகளை அசைத்து ஓடியது போன்ற நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய நயினார் நாகேந்திரன், இவை அனைத்தும் கேலிக்கூத்தாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
மேலும் எல்லாராலும் எம்.ஜி.ஆர் அல்லது ஜெயலலிதா ஆகிவிட முடியாது என்றும், அதற்குத் தனித்துவமான கொள்கைகளும், மக்கள் மீதான இயற்கையான உணர்வுகளும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், தி.மு.க-வை மீண்டும் ஆட்சியில் அமர வைப்பதற்காகவே விஜய் ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கியிருப்பதாக நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனால் தி.மு.க-வை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்காக அரசியல் களத்திற்கு வராமல், வெறும் சைக்கிள் ஓட்டுவதற்காக வருவது வேடிக்கையாக இருப்பதாகவும் அவர் விமர்சித்தார். விஜய்யை ‘ஜோசப் விஜய்’ எனக் குறிப்பிட்டுப் பேசிய அவர், விஜய் முதலில் ஒரு நல்ல குடும்பஸ்தனாகவும், நல்ல கணவனாகவும் இருக்க வேண்டும் எனத் தனிப்பட்ட ரீதியிலும் கருத்து தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
