தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், தேர்தலுக்கு முன்பே அந்த கட்சியுடன் இணைந்து பணியாற்றிய ரகசியத்தை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம் பகிரங்கமாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, தவெக தலைவர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு அளித்தது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், இது தற்செயலாக நடந்த ஒன்றல்ல, தேர்தலுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்பதை எஸ்.ஆர்.எஸ் இப்ராஹிம் உறுதிப்படுத்தியுள்ளார்.

“தேர்தலுக்கு முன்பே தவெக-வின் ஐடி விங் (தகவல் தொழில்நுட்ப அணி) உடன் இணைந்து நீங்கள் பணியாற்றிய ரகசியத்தை இன்று மக்களுக்கு உடைத்து சொல்லலாமா?” என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு, கண்டிப்பாகச் சொல்லலாம், அதில் தவறு ஒன்றும் இல்லை. மக்கள் உண்மையின் பக்கம் இருக்கிறார்கள். தமிழகத்தில் மதவாத சக்திகள் கால் வைக்கக் கூடாது என்பதில் நாங்கள் தெளிவான பார்வையில் இருந்தோம். எங்களது தலைவர்கள் ராகுல் காந்தி, மாணிக்கம் தாகூர் மற்றும் சோலங்கி ஆகியோருக்கு கள நிலவரம் முழுமையாகத் தெரியும்.

மேலும் அவர் கூறுகையில், “மக்கள் நீதியான மற்றும் நிலையான மாற்றத்தை விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை முன்னிறுத்திதான் நாங்கள் தவெக-வுடன் இணைந்து பணியாற்றினோம்” என்று தெரிவித்தார். தேர்தலுக்கு முன்பே திரைமறைவில் தவெக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தல் பணிகளை மேற்கொண்டது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இது தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளிடையே பெரும் விவாதத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தலுக்கு முன்பே விஜய்யுடன் ரகசியத் தொடர்பு வைத்திருந்தது கூட்டணி அரசியலில் புதிய திருப்பமாகக் கருதப்படுகிறது.