தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தையே புரட்டிப் போட்டுள்ள நிலையில், ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அரங்கேறியுள்ளது.

இத்தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி அரியணை ஏற உள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தான் போட்டியிட்ட கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் தோல்வியைத் தழுவினார். இது திமுக தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு 5,747 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, இன்று ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அப்போது உணர்ச்சிவசப்பட்ட தமிமுன் அன்சாரி, “தலைவரே.. நீங்கள் மீண்டும் சட்டப்பேரவைக்கு வர வேண்டும். அதற்குத் தடையாகத் தொகுதி இல்லையென்றால் கவலைப்படாதீர்கள். நான் வெற்றி பெற்ற சிதம்பரம் தொகுதியை உங்களுக்காக இப்போதே ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன்” எனத் தூது விட்டுள்ளார்.

இதைக்கேட்டு நெகிழ்ந்து போன ஸ்டாலின், “அப்படியெல்லாம் பேசக்கூடாது.. மக்களுக்குப் பணியாற்ற உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பு இது” என அந்தத் தாராள மனப்பான்மையை மென்மையாக மறுத்துவிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிமுன் அன்சாரி, “நாங்கள் ஆளுங்கட்சி கூட்டணியாக இருக்கும் வாய்ப்பை இழந்திருந்தாலும், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகச் செயல்பட்டுத் தமிழக மக்களின் நலனுக்காகச் சமரசமின்றிப் போராடுவோம்” என்று அதிரடியாகத் தெரிவித்துள்ளார். தோல்வியிலும் கூட்டணித் தலைவர்கள் காட்டும் இந்தப் பிணைப்பு அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.