தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டுள்ளன. இந்த முடிவுகளின்படி, தமிழகத்தில் தி.மு.க மீண்டும் ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அதே நேரத்தில், அ.தி.மு.க வலுவான இடங்களைப் பிடிக்கும் என்றும், புதிதாகத் தேர்தலில் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் இரட்டை இலக்கத் தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கருத்துக்கணிப்புகள் குறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், மக்களின் உண்மையான தீர்ப்பு என்பது வேறு, கருத்துக்கணிப்புகள் என்பது வேறு என்று குறிப்பிட்டார்.

தமிழகத்தில் தற்போது ஒரு ‘விசில் புரட்சி’ நடந்துள்ளதாகவும், தங்கள் கட்சி 200 இடங்களில் அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றும் என்றும் அவர் மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 4-ம் தேதியை மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்