உத்தரபிரதேச மாநிலம் சீதாப்பூர் மாவட்டத்தில் உள்ள நடவா தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியர் பிரிஜேந்திர வர்மா, பிசிஓ அதிகாரி அகிலேஷ் பிரதாப் சிங்கை தாக்கியதாக கைது செய்யப்பட்டார். செப்டம்பர் 23 அன்று, ஒரு உதவி ஆசிரியரை வர்மா தொந்தரவு செய்ததாக வந்த புகாரை விசாரிக்க, சிங் அவரை அலுவலகத்திற்கு அழைத்தார். விசாரணையின்போது, வர்மா கோபமடைந்து, ஒரு பெல்ட்டை எடுத்து சிங்கை தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அவர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார்.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வர்மாவின் கோபத்தை வெளிப்படுத்தின, அவர் மேசையில் கோப்புகளை அடித்து, சிங்கை பெல்ட்டால் பலமுறை தாக்கி, அலுவலகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தினார். சிங்கின் விளக்கத்தை ஏற்காததால், வர்மா அரசு ஆவணங்களை அழித்து, சிங்கின் மொபைலை உடைத்தார். அவரை தடுக்க முயன்ற எழுத்தர் பிரேம் சங்கர் மவுர்யாவும் லேசான காயம் அடைந்தார். இந்த சம்பவம் காவல்துறைக்கு சென்ற நிலையில் பெல்ட், உடைந்த மொபைல் மற்றும் சேதமடைந்த கோப்புகளை ஆதாரமாக பறிமுதல் செய்துள்ளது. சிங்கின் புகாரின் அடிப்படையில் மருத்துவ பரிசோதனை நடந்து, மேலதிக விசாரணை தொடர்கிறது.