குவாலியரை சேர்ந்த  ஒருவர் பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை தட்டிக்கேட்ட வியாபாரி குடும்பத்தை பிஸ்டல் மிரட்டி பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம், சமூக வலைதளங்களில் வைரலாகி, காவல்துறையை நடவடிக்கை எடுக்க வைத்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் குவாலியர், சிரோல் பகுதியில் நடந்த இந்த அசம்பாவிதத்தில், பாஜகவைச் சேர்ந்த உள்ளூர் தலைவர் ஒருவர், சச்சின் டெண்டுல்கர் மார்க் பகுதியில் சிறிய கடை வைத்திருக்கும் முன்ஷி லால் ஜாதவ் என்பவரின் குடும்பத்தை, பொது இடத்தில் சிறுநீர் கழித்ததை எதிர்த்ததற்காக ஆயுதத்தால் மிரட்டியுள்ளார்.

இந்த சம்பவம் திங்கட்கிழமை இரவு முதல் வீடியோவாக சமூக வலைதளங்களில் பரவி வருவதால், காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.

முன்ஷி லால் ஜாதவ், தன் மனைவி மற்றும் மகளுடன் இணைந்து, புட்டி காலனியில் உள்ள தன்வந்தரி மருத்துவமனை அருகே சிறு வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் அளித்த புகாரின்படி, ஒரு காரில் வந்த நபர், அவர்களது கடை அருகே பொதுவெளியில் சிறுநீர் கழித்ததை முன்ஷி லாலும் அவரது குடும்பமும் எதிர்த்து தடுத்தபோது, அந்த நபர் ஆத்திரமடைந்து, அநாகரிகமாக பேசி, இடுப்பில் இருந்த பிஸ்டலை எடுத்து மிரட்டியுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் ஆயுதத்தை அசைத்து, “உங்கள் கடையை மூடச் செய்வேன்” என கத்தியதாகவும், இந்த மிரட்டல் சம்பவத்தை முன்ஷியின் மகள் வீடியோவாக பதிவு செய்ததாகவும் தெரிகிறது.

தைத்தா மாவட்டத்தைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க பாஜக தலைவர் என கூறப்படும் குற்றவாளியை காவல்துறை தேடி வருகிறது. இச்சம்பவம், குவாலியரில் சிறு விஷயங்களுக்காக மிரட்டல் மற்றும் ஆயுத பயன்பாடு அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.