தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் மாநில மாநாடு விக்ரவாண்டியிலும், இரண்டாவது மாநாடு மதுரையிலும் பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில், தற்போது கட்சியின் மூன்றாவது மாநில மாநாட்டை திருச்சியில் நடத்தத் தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மார்ச் மாத இறுதியில் இந்த மாநாட்டை நடத்தத் தவெக தரப்பில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், இதற்காகத் திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மாநாடு நடத்துவதற்கான பொருத்தமான இடங்களைத் தவெக நிர்வாகிகள் ஏற்கனவே பார்வையிட்டு உறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

​மத்திய தமிழ்நாட்டின் மையப்பகுதியான திருச்சி, அரசியல் ரீதியாகப் பல திருப்புமுனைகளை ஏற்படுத்திய மண் என்பதால், அங்கு மாநாடு நடத்துவதன் மூலம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான தனது பலத்தை இன்னும் வலுவாக நிரூபிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். மார்ச் 4 அன்று தஞ்சையில் நடந்த நிர்வாகிகள் சந்திப்பைத் தொடர்ந்து, இந்த மாநாடு குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்யின் அரசியல் பயணம் அடுத்த கட்டத்திற்கு நகரப் போவதை உணர்த்தும் வகையில் இந்தத் திருச்சி மாநாடு அமையும் என்பதால், அரசியல் வட்டாரங்களில் தற்போதே சலசலப்பு தொடங்கியுள்ளது.