வங்கதேசத்தில் அண்மைக்காலமாக சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்கள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில், காசிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் லிட்டன் சந்திர கோஷ் என்ற இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘வைசாகி ஸ்வீட்மீட் மற்றும் ஹோட்டல்’ உரிமையாளரான இவர், வாழைப்பழம் தொடர்பான ஒரு சிறிய வாக்குவாதத்தின் காரணமாக தாக்கப்பட்டுள்ளார்.

அந்தப் பகுதியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அவரிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை சரமாரியாகத் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக சுவபன் மியா, அவரது மனைவி மஜேதா மற்றும் அவர்களது மகன் மாசூம் மியா ஆகிய மூவரை அந்நாட்டு காவல்துறை கைது செய்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவம் சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட வன்முறையா அல்லது தனிப்பட்ட காரணங்களால் நிகழ்ந்ததா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜனவரி பாதியளவு வரை மட்டும் சுமார் 15-க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சமீபத்தில் ரானா பிரதாப் பைராகி என்ற தொழிலதிபர் சுட்டுக்கொல்லப்பட்டதும், மோனி சக்ரவர்த்தி என்ற மளிகைக் கடை உரிமையாளர் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இத்தகைய தொடர் கொலைச் சம்பவங்கள் அங்குள்ள சிறுபான்மை சமூகத்தினரிடையே பெரும் அச்சத்தையும், பாதுகாப்பற்ற உணர்வையும் ஏற்படுத்தியுள்ளது.